வாசல்: பாண்டிய, சேர பண்பாடுகள் சங்கமிக்கும் இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், கன்னியாகுமரி, நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர் என, ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
தொகுதிகள் வலம்:
கன்னியாகுமரி: தோவாளை தாலுகா, அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகள், 13 கிராமங்கள், 12 பேரூராட்சிகளை உள்ளடக்கியது கன்னியாகுமரி தொகுதி. விவேகானந்தர் பாறை, வள்ளுவர் சிலை, முக்கடல் சங்கமம் என சுற்றுலாத் தளங்கள் உள்ளன. இந்தத் தொகுதிக்குட்பட்ட எல்லை கிராமமான அஞ்சு கிராமம் பகுதியிலிருந்து பலர் வெளியூர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர்.
இவர்கள் ரயில் சேவையைப் பெற, இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்து கன்னியாகுமரி, நாகர்கோவில் செல்ல வேண்டி இருப்பதால், அஞ்சுகிராமம் பகுதியில் ரயில்வே முன்பதிவு மையத்தைத் தொடங்க வேண்டும். கடல்வழி அண்டை மாவட்டமான தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கும், குமரி மாவட்ட மீனவர்களுக்கும் ஏற்படும் மோதலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொகுதிக்குள் மேலோங்கி நிற்கின்றன.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான நகர்புற வாக்காளர்களையும், அதிகம் கல்வியறிவு பெற்றவர்களையும் கொண்டத் தொகுதி நாகர்கோவில். அகத்தீஸ்வரத்தின் சில பகுதிகள், நாகர்கோவில் மாநகராட்சி, இரண்டு பேரூராட்சிகள், 6 கிராமங்களை உள்ளடங்கிய இத்தொகுதி பழமையான வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களைக் கொண்டுள்ளது.
இந்தத் தொகுதியின் பிரதான பிரச்னை சரியான வேலை வாய்ப்பின்மை. இந்தத் தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் கிடையாது. முறையான சாலை வசதிகள் இல்லாததும் தொகுதியின் பெரும் பிரச்னையாக உள்ளது. வழுக்கம்பாறை அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. முக்கிய இணைப்புச் சாலையான அதனை விரைவாக சீர்செய்ய வேண்டும்.
பத்மநாபபுரம்: பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரண்மனை, திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம் என சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள தொகுதி இது. குமரிக் குற்றாலம் என அழைக்கப்படும் இங்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமும், சுற்றுலா சார்ந்த தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. இதனை சரி செய்து, அருவி பகுதியில் பாதுகாப்புக்காக கம்பி அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
விளவங்கோடு: கேரள தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்திருக்கும் தொகுதி விளவங்கோடு. இந்தத் தொகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகம். இத்தொகுதியின் பிரதான பிரச்னை களியக்காவிளை மீனச்சல் ஊருக்குள் இருக்கும் குப்பைக் கிடங்கு. சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
கொள்ளளவைத் தாண்டியும் குப்பைகள் கொட்டப்படுவதும், முறையான பராமரிப்பு இல்லாததும், அப்பகுதி சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாற்றி வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குளச்சல்: மீன்பிடிப்பைப் பிரதான தொழிலாகக் கொண்ட தொகுதி குளச்சல். இத்தொகுதியுள்ள குளச்சல் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை, நாட்டுப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
மீன்பிடித்து திரும்பும் படகுகளை நிறுத்த போதுமான இடவசதி இல்லாததாலும், மீன் ஏலம் விட சரியான இடம் இல்லாததாலும் மீன்கள் அழுகி நஷ்டமடையும் நிலை உள்ளது. இந்தத் தொகுதியின் முக்கியப் பிரச்னை கடற்கரை பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, இயற்கை இடர்பாடுகளால் மீனவர்கள் மாயமாவது தொடர்கதையாக நீடிக்கிறது.
இங்கு மீனவர்களை மீட்பதற்காக, ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை, குளச்சல் துறைமுகத்தில் ஏற்படும் மணல் திட்டை சரி செய்து, நுழைவு வாயிலை அகலப்படுத்த வேண்டும், கடல் அரிப்பைத் தடுக்கத் தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும் என்ற மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கிள்ளியூர்: கணிசமான கடற்கரை கிராமங்களைக் கொண்ட தொகுதியில், கடந்த பத்து ஆண்டுகளாக பணப்பயிரான ரப்பர் பயிரிடப்படுகின்றது. இத்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடம் தோறும் வழங்கப்பட்டு வந்த கூலி உயர்வு, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என்றும், நாற்பது முறைக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், இன்னும் தீர்வு ஏற்படவில்லை என்றும் தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரப்பர் மரத்தில் பால்வற்றி வேலையில்லாமல் இருக்கும், கோடை காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், தொகுதி மக்களிடம் உள்ளது.
களநிலவரம்: இந்தியாவின் தென்கோடியில் இருந்தாலும், தேசிய அரசியலோடு எப்போதும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது கன்னியாகுமரி. மாவட்டத்தின் ஆறு சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றில் திமுகவும், மூன்று தொகுதியில் காங்கிரஸூம் வெற்றி பெற்றுள்ளன.
இயற்கை எழிலும், மலைவளமும் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில், கனிமவளக் கொள்ளை, மயிலாடி சிற்பக்கூடங்கள் சந்திக்கும் பாதிப்புகள், வேலைவாய்ப்பின்மை, போக்குவரத்து நெருக்கடி, தனியார் கல் கிரஷர்களால் ஏற்படும் சூழியல் சீர்கேடுகள், முந்திரி உற்பத்தி பாதிப்பு என தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் பட்டியல் நீள்கிறது.
இந்த முறையும் திமுக - காங்கிரஸ் கட்சிகள் கடந்த முறை போலவே போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக-பாஜக கூட்டணியில், இரண்டு தொகுதிகள் வரை பாஜகவிற்குத் தரப்படலாம் என்கின்றன தேர்தல் ஆரூடங்கள். நாகர்கோவில், பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் பாஜக 'டஃப்' கொடுக்க முடியும் என்றாலும், மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் காரணமாக, மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.