தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, சித்திரை மாதம் 1ஆம் நாள் ஆகும். இதனை விஷு தினமாக கேரள மக்கள் கொண்டாடுவர். அன்றைய தினம் கனி காணுதல், கைநீட்டம் வழங்குதல் என்பன போன்ற பாரம்பரிய வழக்கங்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த நாளில் பெரியவர்களிடம் இருந்து கைநீட்டம் (பணம்) பெற்றால், வருடம் முழுவதும் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வழக்கம் குமரி மாவட்டத்திலும் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் கரோனா நோய்க் கிருமியின் தாக்கம் காரணமாக அதன் பரவலை தடுக்க அரசால் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் கனி காணுதல், கைநீட்டம் வழங்குதல் நிகழ்ச்சி இந்த வருடம் நடைபெறவில்லை. கரோனா தொற்றின் பரவலைத் தடுக்க அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்து, கோயில்களுக்கு பக்தர்கள் வராததால் அனைத்து கோயில்களும் வெறிச்சோடி காணப்பட்டன. கோயில் பூசாரிகள் மட்டும் பங்கேற்று நடத்திய சிறப்பு ஆராதனைகளை, வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.