கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலம் கீழ் பகுதியில், திருவனந்தபுரத்திலிருந்து பயணிகளுடன் வந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. மேலும், அருகிலிருந்த மூன்று கடைக்களுக்குள்ளும் அப்பேருந்து புகுந்தது. காலையில் கடைகள் மூடப்பட்டிருந்ததால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கடைக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தது.
இதில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர் ரசல்ராஜ், நடத்துநர் தவசி, பயணிகள் உள்பட ஐந்து நபர்களையும் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைபோல், நேற்று அதிகாலையில் நாகர்கோவிலிருந்து ஆரல்வாய்மொழிக்கு சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால், அவரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாததால், அருகே உள்ள வீட்டிற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் அதிருஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக ஏற்படும் விபத்துக்களால், பயணம் செய்யும் மக்கள் உயிருக்கு அஞ்சி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசுப் பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ‘பழிவாங்கும்’ வெறிச் செயல் - சாலையில் மீனவர் வெட்டிக்கொலை!