கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "குமரி மாவட்டத்தில் இதுவரை 1,709 நபர்கள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 16 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 1,553 பேருக்கு நோய் தொற்று இல்லை. மீதம் உள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கன்னியாகுமரியில் இதுவரை ஐந்து நபர்கள் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த நபர்களிடம் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 216 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குமரியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை மொத்தம் 6,124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,844 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை!