குமரி: தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் மீன்பிடி துறைமுகங்களில் கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் முக்கிய வர்த்தக மையமாகும்.
இத்துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன. தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்துள்ள நிலையில் தினமும் அதிகாலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இரவில் கரை திரும்புகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் மீன்களை வாங்க குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவிலிருந்தும் தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் மீன் வியாபாரிகள் இத்துறைமுகத்திற்கு வருகின்றனர். மீனவர்கள், வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள் உட்பட தினசரி சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புழக்கத்தில் உள்ள துறைமுகம்.
அதேபோன்று விசைப்படகிலிருந்து கொண்டு வரும் மீன்களை ஏலக்கூடத்தில் கொண்டு வரவும், விசைப்படகுகளுக்கு டீசல், ஐஸ் கட்டிகள் ஏற்றுவதற்கும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் துறைமுகத்தின் வாசல் முன்பு இருந்து கன்னியாகுமரி - அஞ்சு கிராமம் மாநில நெடுஞ்சாலை வரையிலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இதன்காரணமாக துறைமுகத்திற்குள் வரும் வாகனங்களும், வாகன ஓட்டிகளும் திணறுகின்றனர். துறைமுகத்திலிருந்து மீன்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் உரிய நேரத்தில் போக முடியாததால், மீன்கள் அழுகும் நிலை ஏற்படுவதாகவும், வாகனங்களில் பெட்ரோல் வீணாகுவதாகவும் மீனவர்கள் வேதனைத் தெரிவித்து உள்ளனர்.
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் பயன்பாடு இன்றி காலியாக நிலம் அதிகமாக காணப்படுகிறது. அதனை சீர்படுத்தி வாகனங்கள் நிறுத்தவும், மீன்பிடி வலைகள் பின்னவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், வாகன நெருக்கடிக்கும், மீன் ஏலக்கூட நெருக்கடிக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அரசிற்கு வாகன ஓட்டிகளும், மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நான் ஒரு காலத்தில் மருத்துவராக ஆசைப்பட்டேன் - டிஜிபி சைலேந்திரபாபு