கன்னியாகுமரி: முக்கடலும் சங்கமிக்கும் இடமாக உள்ள கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள ஒளி பொருந்திய மூக்குத்தியுடன் காட்சி அளிக்கும் பகவதி அம்மன் கோயில், அகிம்சையை போதித்த காந்தி நினைவு மண்டபம், பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபம், கடலுக்கு நடுவே உள்ள பாறை மீது அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை என செயற்கையாக உருவாக்கப்பட்ட இடங்கள் மட்டுமல்லாமல், இயற்கையாக சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காண்பதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு நாள்தோறும் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
அதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், குமரிக் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தைக் காண பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலமாக, அரசுப் படகு சேவை செய்து வருகிறது.
மேலும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்த்து ரசித்திட 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படகுகளில் பயணிக்க சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சுற்றுலாப் படகில் பயணிப்பதற்கு சாதாரணக் கட்டணமாக 50 ரூபாயும், சிறப்புக் கட்டணமாக 200 ரூபாயும் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு 25 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சுற்றுலா படகு சேவைக்கான கட்டணத்தை இன்று (மார்ச் 17) முதல் உயர்த்தி உள்ளது. இதன் அடிப்படையில், 50 ரூபாயாக இருந்த சாதாரணக் கட்டணம் 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 200 ரூபாயாக இருந்த சிறப்பு வழிக் கட்டணம் 300 ரூபாயாகவும், பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு 25 ரூபாயாக இருந்த சலுகைக் கட்டணம் 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதேநேரம் எந்த வித முன் அறிவிப்புகளும் இன்றி, திடீரென பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் கட்டணத்தை அதிக அளவு உயர்த்தி உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக சுற்றுலாப் படகு கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாடு குறித்த பேச்சுவார்த்தை: டென்சனான அறநிலையத்துறை அமைச்சர்