கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மணவிளை காமராஜ் நகரில் சுமார் 110க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாஜகவின் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். கடந்த தேர்தலின்போது பாஜகவினர் இந்த ஊருக்கு நூலகம், சாலை வசதி உள்ளிட்டவற்றை செய்து தருவதாக உறுதி அளித்திருந்தனர்.
ஆனால், இதுவரை அந்த ஊருக்கு எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்த வசதிகளை செய்து தருமாறு திமுக சட்டப்பேரவை உறுப்பினரிடம் அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்று, இந்த ஊர் பகுதிக்கு நூலகம், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் உடனடியாக நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காமராஜ் நகர் ஊர் ஒட்டுமொத்தமுள்ள 250 வாக்காளர்களும் இன்று(ஜூன் 21) பாஜகவிலிருந்து விலகி திமுக மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினரான சுரேஷ்ராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலாளர் தாமரைபாரதி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ-வுக்கு கரோனா உறுதி!