இந்தியாவின் தென் எல்லையாகவும், புனித யாத்ரீகர்களின் புண்ணிய பூமியாகவும் விளங்கும் கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
முக்கடலும் சங்கமிக்கும் இந்தப் பகுதியில் புனித நீராடி வழிபட்டால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய உதயம், அஸ்தமனம் போன்றவற்றை ஒரே இடத்தில் காணும் வகையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமாக கன்னியாகுமரி விளங்குவதால் தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் திரிவேணி சங்கமத்தில் அமர்ந்து கடல் அழகை ரசிப்பதற்காகவும் காற்று வாங்குவதற்கும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகைதருகின்றனர்.
இதனால் கன்னியாகுமரியை நாட்டின் முக்கியச் சுற்றுலாப் பகுதியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இதனைச் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநரே நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் கன்னியாகுமரி கடற்கரையிலுள்ள கழிப்பறைகளையும் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”மத்திய அரசின் சுதேஷ்தர்ஷன் திட்டத்தின் கீழ் திரிவேணி சங்கமத்தை மேம்படுத்த 3.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முக்கியமாக முக்கடல் சங்கமம், நடைபாதை வசதி, கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்படவுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் வரும் கோடை சீசனுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கும், சுவாமி விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடையே இணைப்புப் பாலத்திற்கான திட்டம் தயாரிக்கும் பணியும் நடந்துவருகிறது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ஆண்லைன் டிக்கெட் வசதியைச் செய்ய பரிந்துரை செய்துள்ளோம். அதில் உள்ள நடைமுறைச் சிக்கலைச் சரிசெய்த பின் ஆன்லைன் டிக்கெட் வசதி நடைமுறைபடுத்தப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் மனு தாக்க
ல்