கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு ஒருநாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி நேற்று மக்கள் ஊரடங்கிற்கு அனைவரும் நல்ல ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இன்று காலை ஐந்து மணிக்கு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதவாறு நாகர்கோவிலில் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.
இதனால், வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டமும் மிகக் குறைவாகவே இருந்தது. அதுபோல், தேநீர் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பெரிய வர்த்தக நிறுவனங்களை வரும் 31ஆம் தேதிவரை திறக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேர தடைவிதித்துள்ளார்.
கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல், கேரளாவிலிருந்தும் அரசுப் பேருந்துகள் நாகர்கோவிலுக்கு இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!