அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தில் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (26). இவர் பல்வேறு வகையான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவத்தினை மாதர் சங்கம் மிகுந்த வேதனையோடு கவனிக்கிறது.
இவர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்களின் தொடர்பு எண்களை அவரது நண்பர்களுக்கும் கொடுத்து அவர்கள் மூலமாகவும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனவே மாவட்ட அளவிலான காவல் நிலையம் இந்த வழக்கை விசாரித்தால் வழக்கில் தீவிரத் தன்மை குறைந்துவிடும். இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. ஆகவே இந்த வழக்கின் தீவிரத் தன்மை மாறாமலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்யும் வகையில் மத்திய புலனாய்வுத் துறைக்கு இந்த வழக்கின் விசாரணையை உட்படுத்துவது மிக முக்கியமானதாகும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதையும் பார்க்க: மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்... வரிசையாக வரும் குற்றச்சாட்டுகள்!