கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாக்குடி கிராமத்தில் ஒளவையாரம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே ஒளவையாருக்கு என்று தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு வருட ஆடி மாதத்திலும் செவ்வாய் கிழமைகளில் ஏராளமான பெண்கள் விரதமிருந்து கொழுக்கட்டை அவித்து அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டின் முதல் ஆடி செவ்வாயை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்தும் ஏராளமான பெண்களும் இங்கு வந்து கொழுக்கட்டை செய்து வழிபட்டனர். குறிப்பாகப் பெண்கள் விரதமிருந்து கொழுக்கட்டை செய்யும் பகுதிக்கு ஆண்களை அனுமதிப்பதில்லை. அம்மனை தரிசிக்க மட்டும் ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.