தமிழ்நாடு, உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கேரளாவில் தங்கியிருந்து மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி நள்ளிரவு முதல் கேரள மாநிலத்தில் 52 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னரே ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறு கேரள மாநில மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரியலூர்து, யோகோவா நிசி, இன்பண்ட் தாஸ், லூர்துமாதா ஆகியோரின் நான்கு விசைப்படகுகள் பழுதாகியதால் அவர்கள் ஆழ்கடலில் தத்தளித்துள்ளனர். பின்னர் மீனவர்கள் படகை சரிசெய்து மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த மறுநாள் கரை திரும்பினர். இதையடுத்து மீன்பிடி தடைக்கால கட்டுப்பாடுகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக கூறி நான்கு விசைப்படகுகளையும் கேரள மீன்வளத்துறை, மரைன் கடல்சார் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், நான்கு படகுகளுக்கும் தலா ரூ 2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் கேரள மீன்வளத்துறையால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதோடு, மீனவர்களின் அனுமதியில்லாமல் குறைந்த விலையில் ஏலம் விடப்பட்ட அவர்களின் மீன்களுக்கு உரிய விலையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பில் குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.