கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாகப் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவிவருகிறது. இதனால் வேலைவாய்ப்பின்றி வருமானம் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்துவருகின்றனர்.
பணம் கேட்டு மிரட்டல்
இந்நிலையில், ஏழை, எளிய மக்கள் தனியார் நிதி நிறுவனங்களில் குழுக்கள் மூலமாக தொழிலுக்காகவும், தங்களது தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் கடனுக்கு பணம் பெற்றுள்ளனர்.
இவர்கள் மாதந்தோறும் அசல், வட்டி பணத்தைச் சரியாகக் கட்டிவந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு, வருமானம் இன்மையால் பணத்தைக் கட்ட முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தைக் கேட்டு மிரட்டிவருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வி என்பவர் கூறியதாவது:
"நாங்கள் குழுக்கள் மூலமாக தனியார் நிதி நிறுவனத்தில் பணம் பெற்றுள்ளோம். மாதந்தோறும் பணம் சரியாகக் கட்டிவந்துள்ள நிலையில் கரோனா ஊரடங்கு வேலைவாய்ப்பு இல்லாததால் பணத்தைக் கட்ட முடியவில்லை.
நடுவீட்டில் அமர்ந்து தொல்லை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் மாதம்தோறும் பணத்தைக் கட்டும்படி மிரட்டிவருகின்றனர். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து பணத்தை வாங்கும் வரை வீடுகளிலேயே அமர்ந்துவிடுகின்றனர்.
இதனால் வீட்டில் வயதுக்கு வந்த பெண்கள் இருப்பதால், இவ்வாறு இளைஞர்கள் வந்து வீட்டில் இருக்கும்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு தீர்வு காண வேண்டும்.
முதலமைச்சர் பார்வைப்படுமா?
இன்னும் இரண்டு நாள்களுக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் தனியார் நிதி நிறுவன கடன் வசூல் குறித்து ஒரு நிலையான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லை என்றால் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ள பல குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்கொலைக்குச் செல்லும் நிலை ஏற்படும" எனக் கூறினார்.
இதையும் படிங்க : வரதட்சணை கேட்டு மாமியார் தாக்கியதாக மருமகள் புகார்!