குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாகூர் மீரான் பீர் முகமது. இவர் 1989ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 50 முறை போட்டியிட்டுள்ளார். தற்போது நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தலில் 51ஆவது முறையாக குமரி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, நான் நாகர்கோவில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கட்டடத்தில் ஸ்டுடியோ கலர் லேப் வைத்து நடத்திவந்தேன். ஒருநாள் திடீரென எனது கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நான் அரசு அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எனது பொருள்களும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து 1989ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன்.
அப்போது முதல் இதுவரை 50 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது 51ஆவது முறையாக குமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் குமரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க பாடுபடுவேன்.
மேலும் குறைந்தது இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.