சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஸ்பார்ஸா ஹோட்டல் முன்பிருந்து சன்செட் பாயிண்ட் வரையிலான 250 மீட்டர் நீளமுள்ள தடுப்பு சுவர், கடல் அழகை பார்வையிட வசதியாக நிழற்குடை போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ், ரூ.9.37 கோடிசெலவில் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே திடீரென வந்தார்.
காமராஜர் நினைவு மண்டபத்தில் இருந்து கடற்கரை சாலை வழியாக, வெயிலில் நடந்து சென்றவாறே பணிகளை பார்வையிட்டார்.
பணிகள் குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன், செயற் பொறியாளர் சனல்குமார் ஆகியோர் ஆட்சியருக்கு விளக்கினர். கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கிய பணிகள் இதுவரை ஏன் முடிக்கப்படவில்லை என்று கேட்ட போது, அதற்கு அதிகாரிகள் கூறிய பதிலால் ஆட்சியர் கோபம் அடைந்தார்.
அப்போது அதிகாரிகளிடம் "கட்டுமான பணிகளுக்கான மணல், ஜல்லி, மண் போன்றவை கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னையை, நான் சரிசெய்து கொடுத்தும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதாக உறுதியளித்தீர்கள். ஆனால், அந்த காலக்கெடு முடிந்தும் பணிகளில் கொஞ்சம் கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.
ஆய்வு செய்ய நான் வருவதாகக் கூறியும், பணிகளின் தற்போதைய நிலையை எடுத்து கூறவில்லை, என்று பேரூராட்சி அதிகாரிகளிடம் கோபத்துடன் கூறினார்.
தொடர்ந்து பணிகள் காலதாமதமான நாட்களுக்கு, சம்பந்தபட்டவர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்தப் பணிகளை சரிவர ஆய்வு செய்யாத அதிகாரிகளையும் கடுமையாக எச்சரித்தார்.