தற்போது கோடை சீசன் என்பதால் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் படகு பயணத்தை விரும்புகின்றனர்.
இந்த படகு போக்குவரத்து, தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. விவேகானந்தர் பாறைக்குச் செல்ல ஒரு படகில் 150 சுற்றுலா பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகிறார்கள். மேலும், படகு பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் கொடுக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில், தற்காப்புக்காக வழங்கப்படும் லைஃப் ஜாக்கெட்டுகளை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவதால், வியர்வை நிறைந்து, அழுக்குப்படிந்து காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு லைஃப் ஜாக்கெட்டுகளை தினந்தோறும் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.