தமிழ்நாட்டில் மக்களைவத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை சீசனில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டதால், குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சுற்றுலா சென்றனர். இதில் முக்கியமாக கன்னியாகுமரியில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறப்பதற்கு முதல் நாள் ஜீன் 2ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் கடலின் அழகை ரசிக்கவும், சூரிய எழுதல் - மறைதல், விவேகானந்தர் பாறை, திருவள்ளுர் சிலை, பத்மநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றுவந்தனர்.
கோடை விடுமுறையில் பெரும்பாலும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். இதில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்காக மட்டும் அதிகாலையிலிருந்தே வரிசையில் காத்திருந்து தினமும் 12 ஆயிரம் பேர் வரை படகு சவாரி மேற்கொண்டனர்.
இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், விவேகானந்தா கேந்திரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆகியவற்றிற்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்துள்ளது.
இங்குள்ள வரலாற்று சிறப்புப் பகுதிகளான வட்டக்கோட்டை, உதயகிரி கோட்டை, மாத்தூர் தொட்டி பாலம், மலைக்கோயில் என அனைத்து சுற்றுலா மையங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் இந்த இரண்டு மாத கோடை சீசனில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்திருப்பது வாகன சுங்கச்சாவடி, சுற்றுலாத் துறை கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது.
விவேகானந்தர பாறைக்கு மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அரசுத் துறைகள், தனியார் வர்த்தகர்கள், விடுதி வியாபாரிகள், சிறு, குறு தொழிலாளர்கள் அனைவருக்கும் அதிகளவில் வருவாய் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.