இன்று இந்தியாவின் கிங் மேக்கரும் முன்னாள் முதலமைச்சருமான காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கன்னியாகுமரி கடற்கரையில் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபம் தற்போது முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் காமராஜரின் உண்மைத் தொண்டனாக விளங்கிய நடிகர் சிவாஜி கணேசனின் புகைப்படம் மணி மண்டபத்தில் எங்கும் வைக்கப்படவில்லை. எனவே உடனடியாக காமராஜருடன் நடிகர் சிவாஜிகணேசன் உள்ள புகைப்படம் கண்டிப்பாக பொதுமக்கள் பார்வைக்கு மணிமண்டபத்தில் வைக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கவில்லை என்றால் மணிமண்டபத்தை பராமரிக்கத் தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் நடிகர் சிவாஜி கணேசனின் புகைப்படம் வைக்கக் கோரியும் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.