அஞ்சுகிராமம் அடுத்த கேப் பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் கிருஷ்ணபிள்ளை தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். இந்த விழாவில் மொத்தம் 225 மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: குமரி மாவட்டத்தில் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறுகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். வேலை இல்லை என்பதைவிட வேலைக்குத் தேவையான தகுதி இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க பொறியியல் மாணவர்கள் பட்டதாரி என்பதைத் தாண்டி சிறந்த பொறியாளராக வரவேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சியை பொறுத்தளவில் செயற்கைக் கோளாக இருந்தாலும், பாகங்களாக இருந்தாலும் இந்தியா தனக்குத் தேவையானதை தானே தயாரிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. நம்முடைய தேவையைத் தாண்டி புதிதாக வளர்ச்சி அடையும் நாடுகளுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கும் நிலைக்கு நாம் வளர்ந்துள்ளோம்.’ எனக் கூறினார்.