கன்னியாகுமரி மாவட்டம், ஆரோக்கியபுரம், கடியபட்டினம், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த 600 மீனவர்கள், ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழில் செய்வதற்காகச் சென்றனர். ஈரானில் தற்போது கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டுத் தீவுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தில் தங்களை ஊருக்கு அனுப்பும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வரும்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் தீவுகளில் தஞ்சம் அடைந்த இந்திய மீனவர்களைச் சந்தித்த தூதரக அதிகாரிகள் அரேபிய முதலாளிகளுடன் சேர்ந்து, மீனவர்களை மீன்பிடித் தொழிலுக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.
இது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் குடிநீர் உள்ளிட்ட எவ்வித உணவுப் பொருட்களும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீனவர்களைச் சந்தித்த அரேபிய முதலாளிகள், மீன்பிடிக்கச் சென்றால் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தருவதாக மிரட்டியுள்ளனர்.
இது குறித்து மீனவர்கள் வாட்ஸ்அப்பில் காணொலி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி, ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் படி தகவல்களை அனுப்பி உள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் அவர்களை விரைந்து மீட்டுக் கொண்டு வரவேண்டும் என மீனவர்களும், உறவினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:அந்தரங்க உறுப்பில் ரூ.8 கோடி மதிப்புள்ள கொக்கைன் கடத்தல் - பெண் கைது!