கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள நேசமணி கிறிஸ்தவ கல்லூரி எதிரில் இயங்கி வரும் பிரின்ஸ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் பெட்ரோல் போட்ட இரு சக்கர வாகனங்கள், நான்கு வாகனங்கள் திடீரான பழுதாகி உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல் பங்க் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பழுதடைந்த வாகனங்களின் பெட்ரோல் டேங்கிலிருந்து பெட்ரோலை எடுத்து பார்த்த போது தண்ணீர் போலவும், ஜூஸ் போலவும் பல்வேறு கலர்களில் பெட்ரோல் காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், பத்திற்கும் மேற்பட்ட சொகுசு வாகனத்தில் வந்தோர் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரின்ஸ் கூறுகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோலில் 10 விழுக்காடு எத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனால் கலந்த பெட்ரோலை மழைக்காலங்களில் லாரிகளின் மூலம் கொண்டுவந்து பங்குகளில் நிரப்பும்போது அதில் தண்ணீர் புகுந்தால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது.
எனவே, தற்போது இந்த பங்கிலிருந்து பெட்ரோல் நிரப்பி பாதிப்பு ஏற்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் சரி செய்வதற்கான தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் மார்த்தாண்டத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.