குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். இதனையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,"இலங்கையில் உள்ள தமிழர்களின் அன்றாட வாழ்க்கை சமீபகாலமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்குமாகணத்தில் தினந்தேறும் போராட்டம் நடைபெறுகிறது. கூட்டாட்சி முறை இலங்கையில் இல்லாததால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கையில் 13வது அரசியல் சட்டம் திருத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் மற்றும் திமுக முயற்சிக்க வேண்டும். மேலும்,இந்தியப்பொருளாதாரம் பணமதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மூன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க மன்மோகன் சிங் கூறிய கருத்துகளை மத்திய அரசு ஏற்க மறுத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கியில் இருந்து உபரி நிதி ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடியை மத்திய அரசு எடுத்துள்ளது. அந்தப்பணத்தை யுத்தம்,பஞ்சம்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு குறையும் போது தான் எடுக்க வேண்டும் .
ஆனால் மத்திய அரசு தேவையில்லாமல் தற்போது எடுத்துள்ளது. இது பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லும். நிதி ஆயோக் இனிவரும் காலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது . இது தமிழக மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் தமிழகத்தில் முன்பை விட மக்கள் தொகை குறைந்துள்ளது.
இதனால் குறைந்த நிதிமட்டுமே கிடைக்கும். நிதி ஆயோக் இந்த நிலையை மாற்றிக்கொள்ளவிட்டால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று பிரசாரம் செய்யும் நிலை ஏற்படும் " என்றார். மேலும் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சரின் முயற்சியை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும்; இதற்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.