குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் உள்ள மலர் சந்தை மிகவும் பிரபலமானதாகும். இந்த மலர் சந்தையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கடைபிடிக்கப்பட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் கோயில்களில் திருவிழாக்கள், கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.
இதனால் தோவாளை மலர் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 200க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ 450 ரூபாய்க்கும், ரூ.300க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ 500 ரூபாய்க்கும், ரூ.250 க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் 450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் ரோஜா தாமரை உள்ளிட்ட மற்ற மலர்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள் போட்டியிட்டு அலைமோதுகின்றனர். பூக்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து, பூக்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து பூக்களை வாங்குவதற்காக தோவாளை மலர் சந்தைக்கு வரும் வியாபாரிகள் பூக்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.