கன்னியாகுமரி: விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக எம்பிஏ பட்டதாரியை ஏமாற்றி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கணவன், மனைவியை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாகக் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் எம்பிஏ பட்டதாரி ஒருவரிடம் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு விமான நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக மெயில் வந்துள்ளது.
இந்த போலி மெயிலை நம்பிய அந்த இளைஞர் வேலைக்காக அவர்களிடம் ரூபாய் 2 கோடியே 49 இலட்சத்து 23 ஆயிரத்து 205 கொடுத்து ஏமாந்ததாக புகார் மனு ஒன்றை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத்திடம் அளித்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலு என்பவரின் மகன் ரெஞ்சித் (வயது 45) மற்றும் அவரது மனைவி அம்பிகா (வயது 36) ஆகிய இருவரும் கன்னியாகுமரி இளைஞரிடம், விமான நிலைய காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சேவை கட்டணம், விண்ணப்ப பரிசீலனை கட்டணம் என பல்வேறு தவணையாக ரூபாய் 2 கோடியே 49 இலட்சத்து 23 ஆயிரத்து 205 வசூலித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பின், வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, சைபர் கிரைம் போலீசார் விமான நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பாலு மற்றும் அம்பிகா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த வழக்கு... ராஜஸ்தானில் ஒருவர் கைது!