கன்னியாகுமரி: ஆண்டுதோறும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பருவ நெல் சாகுபடி பணிகளுக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதனை ஒட்டி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
கடந்த ஒன்றாம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய்கள் தூர்வாரப்படாத காரணத்தால் பெரும்பாலான கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயப் பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் அணை திறக்கப்பட்டு இரண்டு, மூன்று நாட்களில் அணைகள் மூடப்பட்டன. எனவே, 25 நாட்களான பின்னரும் முழுமையாக தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெரும்பாலான கால்வாய்களில் தண்ணீர் வரவில்லை. கடை வரம்பு நிலங்களில் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பயிரிடப்பட்ட நெல் மணிகள் கருகி நாசமாகும் நிலையில் உள்ளன. இது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: 'மதுபானம் மூலம் பணத்தை அறிவாலயத்திற்கு கொண்டு சேர்த்தது தான் செந்தில் பாலாஜி செய்த சாதனை'
இதில் பங்கேற்க விவசாய சங்கப் பிரதிநிதிகள் வந்தனர். அவர்கள், உரிய நேரத்தில் கால்வாய்கள் தூர்வாரப்படாத அதிகாரிகளின் கவனக்குறைவைக் கண்டித்துப் பேசினர். இதனால் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மூன்று நாட்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் வாக்கு உறுதி அளித்தனர்.
ஆனாலும் சமாதானம் அடையாத விவசாயிகள் தாங்கள் ஏற்றி வைத்திருக்கும் பயிர்கள் கருகி நாசமாகும் போது அந்த நஷ்டத்தினை அரசு ஏற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர். இதற்கு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் அரசிடமும் எடுத்துரைத்து அதற்கான இழப்பீடு பெற்று தரப்படும் என உறுதி கூறினர். அதன் பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
பேச்சிப்பாறை அணை திறந்தும் 25 நாட்களாகியும் கால்வாயில் தண்ணீர் வராததால் விவசாயப் பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மதுரை நகரில் 10 ஏக்கரில் அசத்தல் விவசாயம்.. திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் இயற்கை விவசாயம்!