குளச்சலை அடுத்த வாணியக்குடியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டம் சைமன்காலனி ஊராட்சிக்கு உட்பட்ட வாணியக்குடியில் கடந்த 8ஆம் தேதி ஐஸ் தொழிற்சாலையின் வாயு குழாயில் ஏற்பட்ட கசிவினால் அதிகளவில் அம்மோனியா வாயு வாணியக்குடி ஊருக்குள் பரவி நூற்றுக்கும் அதிகமான மக்களுக்கு கண் எரிச்சலுடன் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஐஸ் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள சுமார் 500 குடும்பத்தினர் ஊரைவிட்டு சென்றுவிட்டனர்.
பல வருடங்களாக இந்த ஐஸ் தொழிற்சாலை குறித்து எச்சரித்தும் இதுவரை மூடுவதற்கு நடவடிக்கை இல்லை. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இந்த ஐஸ் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஊருக்குள் செயல்படும் மூன்று ஐஸ் தொழிற்சாலைகளுமே பாதுகாப்பற்ற சூழலில் இயங்கிவருகின்றன. அதுமட்டுமின்றி இவற்றிற்கு நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவதால் எங்கள் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்படும் இவை குறித்து முறையான நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.