கன்னியாகுமரி: திருமணமாகி 8 மாதங்களே ஆனநிலையில் மனைவியை கொலை செய்த கணவன் வீட்டின் முன்பு மனைவியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதைத்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் கட்டிட ஒப்பந்தக்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜெனிலா ஜோபி (23). கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் ஜெனிலா ஜோபிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சேம் மரியதாஸ் பெங்களூருரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆடம்பரமாக நடைபெற்ற திருமணத்திற்குப் பின்னர் ஜெனிலா ஜோபி கணவருடன் பெங்களூருவில் கணவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். புதுமண தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு ஜெனிலா ஜோபிக்கும் கணவர் சேம் மரியதாசுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் ஜெனிலா ஜோபி படுக்கை அறையில் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் ஜெனிலா ஜோபி தூங்கிக் கொண்டிருந்த போது கணவர் சேம் மரியதாஸ் தனது இளம் மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் தொட்டாபள்ளபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேம் மரியதாசை கைது செய்ததுடன்
ஜெனிலா கோபியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஜெனிலா ஜோபியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடலைப் பெற்றுக் கொண்ட ஜெனிலா ஜோபியின் உறவினர்கள் பெங்களூருவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு ஜெனிலாவின் உடலைக் கொண்டு வந்துள்ளனர். சேம் மரியதாஸ் செய்த கொடூர செயலுக்கு பழிவாங்கும் விதமாக, அவருடைய வீட்டிலேயே ஜெனிலா ஜோபியின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து கணவரின் வீடு அமைந்துள்ள கருங்கல் திப்பிரமலை பகுதிக்கு உடலைக் கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து புதுப் பெண்ணின் உடல், சேம் மரியதாஸ் வீட்டின் வளாகத்தில் வாசல் முன்பு குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடல் கன்னியாகுமரியில் கணவரின் வீட்டின் முன்பு அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேம் மரியதாசுக்கு பெங்களூருவில் வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் தான் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கொலை நடந்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி ஆணவக் கொலை: மகனைக் கொன்ற தந்தை கைது