கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சராகவும் அதிலும் குறிப்பாக முதல் கிறிஸ்தவப் பெண் அமைச்சராகவும் விளங்கிய லூர்தம்மாள் சைமனின் 110ஆவது பிறந்தநாள் இன்று (செப்.26) கொண்டாடப்பட்டது. அப்போது குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு லூர்தம்மாள் சைமனின் பெயரை சூட்டவேண்டுமென அப்பகுதி மக்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
லூர்தம்மாளின் பிறந்தநாளையொட்டி, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள், பணியாளர்கள், மீனவ அமைப்பு பிரதிநிதிகள் சார்பாக கேக் வெட்டி கொண்டாடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொது செயாலாளர் அருட்பணியாளர் சர்சில், "தமிழ்நாட்டில் விசைப்படகு என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி, நாட்டு படகு மீனவர்களுக்காக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த அரிய மீன்களை குளங்களில் வளர்க்க செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய லூர்தம்மாள் சைமனின் பெயரை குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு சூட்ட வேண்டும். அவரின் பெயரில் மீனவர் பயிற்சி பள்ளி ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.
மத்திய மாநில அரசினுடைய மீனவர் தொடர்பான தற்போதைய திட்டங்கள் அனைத்தும் லூர்தம்மாள் கொண்டு வந்த திட்டங்களுக்கும் மீனவர்களுக்கும் எதிராக உள்ளன என்று தெரிவித்தார்.
1911ஆம் ஆண்டு இதே செப்.26ஆம் தேதி குமரி மாவட்டம் மேலமணக்குடி கிராமத்தில் அலெக்சாண்டர் - பார்பரம்மாள் தம்பதியினரின் புதல்வியாகப் பிறந்தவர் லூர்தம்மாள். இவர் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் 1957-1962 வரை மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது மீன்வளர்ப்பை மீனவர்கள் அல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடமும் 1959ஆம் ஆண்டில் பரவலாக்கினார்.
இவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, 'தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்' என்பதை கொண்டுவந்தார். இதன்மூலம், மாவட்ட ஆட்சிக் குழு முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு கிராமம், ஒன்றியம் என்ற அளவில் பஞ்சாயத்துக்கள் மாற்றி கட்டமைக்கப்பட்டன. தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க வழிவகை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அண்ணா சிலை அவமதிப்பு...கண்டமங்கலத்தில் போலீஸ் குவிப்பு