கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மஞ்சள், கல் உப்பு, துளசி, வேம்பு , கற்றாழை போன்றவை கலந்த இயற்கை கிருமிநாசினி தயாரித்து நான்கு வாகனங்கள் மூலம் கடற்கரை கிராமங்களில் தெளிக்கும் பணி நேற்று தொடங்கியது.
கொட்டாரம் காமராஜர் சிலை முன்பு நடத்தப்பட்ட நிகழ்ச்சியை திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பிளீச்சிங் பவுடர் போன்ற கிருமி நாசினிகள் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவைகளாக இருந்தாலும், வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் கிடையாது. இயற்கையாக கிடைக்கும் மஞ்சள், வேம்பு, துளசி, கற்றாழை, கல் உப்பு போன்றவைகளை அரைத்து கரைசல்களாக்கி பல்வேறு மீனவ கிராமங்களில் தெளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இதைத் தெளித்து கரோனாவை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முறையை அரசு பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கரைசலைத் தெளித்து கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா பதவி விலகல்!