கன்னியாகுமரி: கனமழை காரணமாக மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று (நவ. 16) அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் உயர்ந்துவருகிறது.
அதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இருச்சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி, நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, தக்கலை உள்ளிட்ட இடங்களில் கன மழை தொடர்ச்சியாக பெய்துவருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 29 மிமீ மழை பதிவாகியுள்ளது.