கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குள்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உடும்பு, காட்டுப்பன்றி, மலைபாம்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வன விலங்குகளை சிலர் வேட்டையாடிவருவதாக வனத் துறையினருக்குப் புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் வனத் துறையினர் வேட்டைக்காரக் கும்பலைத் தேடிவந்தனர்.
அதையடுத்து, ஏப்ரல் 29ஆம் தேதி தெற்கு மலைப்பகுதியில் வனத் துறையினர் ரோந்துப்பணியின்போது உடும்பினை வேட்டையாடி சமைத்த சிலர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதுதொடர்பாக தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்த கண்ணன், சுபாஷ், பாலகிருஷ்ணன் ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆனால் இந்த வேட்டைக்கார கும்பலின் தலைவன் தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் (23) என்பவர் தலைமறைவாக இருந்துவந்தார். அவர், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து அங்கு மாறுவேடத்தில் சென்ற வனத் துறையினர் வாழைத்தோட்டம் ஒன்றில் வைத்து அவரைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது!