கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த "கலைவாணர் அரங்கம்" கடந்த 2018ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதன் பின், அப்பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கட்டடம் ஒன்று கட்ட தீர்மானிக்கப்பட்டு, தற்போது அதற்கானக் கட்டடப்பணிகள் முடிவுற்று திறக்கும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், அக்கட்டடத்திற்கு "கலைஞர் மாளிகை" எனப் பெயர் வைக்க மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் "கலைஞர்" பெயர் வைப்பதற்கு அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதேபோன்று "கலைவாணர்" பெயரே தொடரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர். இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (மே31) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'இக்கட்டடம் ஏற்கெனவே இருந்தவாறே, "கலைவாணர்" பெயரிலேயே அழைக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் 1920-ன் பிரிவு 189 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 198-ன் பிரிவு 266 (மற்ற மாநகராட்சிகளுக்கும் பொருந்த கூடியது) முதலானவற்றில், அரசின் அனுமதி பெற்ற பின்னரே, மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துக்களுக்கு பெயரிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்ட சட்டவிதிகளை பின்பற்றாமல், அரசின் ஒப்புதலின்றி நகராட்சி சொத்துகளுக்கு பெயர் வைப்பதற்கான முன்மொழிவுகளை மன்றத்தில் வைத்து தீர்மானங்கள் இயற்றப்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளுக்குட்பட்டு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், கட்டடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் ஆணையாளர் வழியாக அரசிற்கு அனுப்பப்பட வேண்டும்.
அரசின் அனுமதி பெற்ற பின்னரே பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கலைவாணர் பெயரை மாற்ற திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னக மக்கள் இயக்கத்தினர் இன்று அரசின் அறிக்கையை வரவேற்று, நாகர்கோவிலில் கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியினர், மாவட்ட அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்தும், பேருந்து பயணிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதையும் படிங்க: 'ஒருபுறம் பாரத் மாதா கி ஜெ... மறுபுறம் கலைஞர் வாழ்க..!' - திக்குமுக்காடிய நேரு அரங்கம்!