கன்னியாகுமரி: நாகர்கோவில் கோட்டார் பகுதியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் பெண் மருத்துவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர் மீது கோட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
அந்த புகாரில், ‘நான் வேலை பார்த்து வரும் ஆயுர்வேத மருத்துவமனையில் ஆசாரி பள்ளம் அனந்தன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி சுரேஷ் சிங் (வயது 52) உறைவிட மருத்துவராக (பொறுப்பு) பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், விரும்பத்தகாத செயல்களைச் செய்து வருகிறார் என்றும், வெறுப்பூட்டும் வகையில் பின் தொடர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் என் மானத்தை அவமதிக்கும் எண்ணத்துடன் சைகை செய்கிறார்.
பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் கொடுத்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக கோட்டார் காவல் நிலையத்திற்கு மாணவிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புகாரின் பேரில் போலீசார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் படித்து வரும் பயிற்சி மாணவிகளிடம், பயிற்சி மருத்துவர்களிடமும் இரண்டு மணி நேரம் பெண் போலீஸ் அதிகாரி விசாரணை மேற்கொண்டார்.
பெண் டாக்டர் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது குறித்த விவரங்களைப் பயிற்சி மருத்துவர்களிடமும் பயிற்சி மாணவிகளிடம் கேட்டு அறிந்தார். இந்நிலையில் பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கெட்ட வார்த்தை பேசுதல், கடத்தல், பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் வார்த்தை, சைகை மூலம் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்! பூத்து குலுங்கும் மலர்களை காண ஆசை!