கன்னியாகுமரியில் காந்தியின் அஸ்தியை அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் 1956ஆம் ஆண்டு காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது .அதனை அப்போதைய கேரள ஆளுநர் திறந்துவைத்தார். மத ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இந்த காந்தி மண்டபத்தின் கட்டட அமைப்பானது இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காந்தி மண்டபம் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளதால் இதை நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பார்த்துச் செல்கின்றனர். இத்தகைய சிறப்புவாய்ந்த காந்தி மண்டபம் பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால் கட்டட பகுதிகள் உடைந்து கீழே விழுந்துள்ளது.
உடைந்த பாகங்கள் சுற்றுலாப் பயணிகள் மீது அடிக்கடி விழுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து பார்க்கும் இடமானது, உடைந்து பராமரிப்பின்றி கிடப்பதால் நமது நாட்டிற்கு அவமானம் என இங்கு உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மண்டபத்தையும், பூங்காவையும் சீரமைத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணித் துறை பொறியாளரிடம் கேட்டபோது, தமிழ்நாடு அரசு காந்தி மண்டபத்தை சீரமைக்க 30 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்க இருப்பதாகவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.