கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்(30). இவர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கும் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில், ஜூன் 15 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள டீக்கடையில் அரவிந்த் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால் அதிக அளவு பணம் கிடைக்கும் எனவும், வெளிநாடுகளில் அதை விற்றால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அரவிந்த் அந்த வாலிபரிடம் விவரங்களை கேட்டுள்ளார்.
அப்போது சுசீந்திரம் சீயோன்புரம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஆல்வின் பிரபு என்ற கள்ளன் பிரபு என்பவரிடம் பேசலாம் எனக் கூறி அவரை அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த வாலிபர். ஜான் முதலில் ரூ.25 ஆயிரம் அட்வான்ஸ் தொகை தரும்படியும், இரிடியம் கையில் கிடைத்ததும் மேலும் ரூ.25 ஆயிரம் தருமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய அரவிந்த் அந்த வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அரவிந்துக்கு போன் செய்த அந்த வாலிபர், அஞ்சுகிராமம் பால்குளம் பகுதிக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதன்படி பால்குளம் பகுதிக்கு சென்றபோது, அங்கு ஜான் ஆல்வின் பிரபு, கோட்டார் கோவிலடி விளை தெருவை சேர்ந்த சதீஷ்குமார்( 39), தேனி மாவட்டம் குமுளி வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்(42) ஆகியோர் இருந்தனர். அவர்கள் மேலும் ரூ.25 ஆயிரத்தை அரவிந்திடம் பெற்றதோடு இரிடியம் தராமல் ஏமாற்றி உள்ளனர்.
இதையடுத்து தன்னை ஏமாற்றியவர்கள் குறித்து அஞ்சுகிராமம் காவல்துறையில் அரவிந்த் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜான் ஆல்வின் பிரபு, நாகராஜன், சதீஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்தனர். இந்த மூவரும் இதேபோன்று பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.