வாகன விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு சாலையில் திருமண விழாவிற்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காவலர் மீது தாக்குதல்
அப்போது அவ்வழியாக வந்த கியூ பிரிவு காவலர் சிவா, போக்குவரத்தை சரிசெய்ய முயன்றார். போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, விபத்துக்குள்ளான வாகன ஓட்டிகளிடையே சமாதனம் செய்ய முற்பட்டார்.
அப்போது ஆத்திரம் அடைந்த திருமண வீட்டிற்குச் சென்றுவந்த கும்பல் கியூ பிரிவு காவலரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. தான் காவல் துறையைச் சேர்ந்தவர் என சிவா பலமுறை கூறிய பின்னரும், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாத அந்தக் கும்பல் காலணியைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிலர், கியூ பிரிவு காவலர் சிவாவை மீட்டு, இந்தச் சம்பவம் குறித்து கோட்டாறு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
கும்பல் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதனடிப்படையில், காவலரைத் தாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்டன் (40), ஜார்ஜ் (49), அந்தோணி அடிமை (35), ஜவஹர் (33) ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!