தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்துவருகின்றன. அதன்படி குமரி மாவட்டத்தில் 457 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன.
சுமார் 49,000 மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்துவருவதுடன், பள்ளியில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கருங்கல் அருகே செல்லம்கோணம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் ஒருவருக்கு சமீபத்தில் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவருடன் பணிபுரிந்த மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இதனைத்தொடர்ந்து அந்தப் பள்ளியில் பணிபுரிந்த சக ஊழியர்கள், மாணவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அருமனை அண்டுகோடு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கும், பூதப்பாண்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குத் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்துவருகின்றனர்.
கரோனா ஊரடங்கிற்குப் பிறகு தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவரும் சூழலில், மாணவன் உள்பட நான்கு ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணத்தொகை ரூ.40 லட்சமாக அதிகரிப்பு