கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமான பொருட்களாக உள்ளதா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
இதே போல் சீசன் காலங்களில் மாம்பழம், கொய்யாபழம், பலா மற்றும் குளிர்பான வகைகள் உட்பட அனைத்து பொருள்களையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரம் இல்லாத பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நவீன மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மீன் சந்தையில் கெட்டுப் போன மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி தலைமையிலான குழுவினர் மீன் சந்தைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பார்மலின் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டு போன 50 கிலோ மீன்களை கண்டறிந்த அதிகாரிகள் அந்த மீன்களை பறிமுதல் செய்து குளோரின் பவுடர் தூவி அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் இதுபோன்ற பார்மலின் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கூறும் போது ”ஒரு சில நாட்களாக கெட்டுப் போன மீன்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததையடுத்து இந்த ஆய்வு மேற்கொண்டோம்.
கெட்டுப் போன மீன்களை விற்ற வியாபாரிகளிடம் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் முறை என்பதால் மீன்களை பறிமுதல் செய்து குளோரின் பவுடர் தூவி அழித்துள்ளோம். மேலும் இது போன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபடுவார்கள் என்றால் அவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும். மேலும் அவர்கள் இந்த இடத்தில் மீன் விற்பனை செய்வதற்கு அனுமதியை ரத்து செய்வோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பார்மலின் என்பது சடலங்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க பயன்படுததப்படும் திரவம் ஆகும். இந்த வேதி திரவத்தை உணவுப் பொருளான மீன்களை பாதுகாக்க பயன்படுத்தினால் புற்று நோய் உள்ளிட்ட பல ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பல மீனவர்கள் கெட்டுப் போகாத, நல்ல நிலையில் உள்ள மீன்களையே விற்றதால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மீன்களின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: நகையை ஆட்டையைப் போட்ட பலே ஆசாமிகள் - சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை!