கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 20க்கும் மேற்பட்டோர் கரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதி மற்றும் அவர்களின் சொந்த ஊர்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கரோனா தொற்று பகுதியாக அறிவித்து அதனை முழு கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இந்தப் பகுதியிலிருந்து யாரும் வெளியே செல்லவோ, உள்ளே வரவோ முடியாது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தினம்தோறும் நடந்து வருகின்றன. அதன்படி குமரி மாவட்டத்தில் வெள்ளாடிச்சிவிளை பகுதியும் கரோனா பாதிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். சுமார் 25 நாள்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ளதால், போதுமான உணவு கிடைக்காமலும் ஒருவிதமான மனஅழுத்தத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர் வாட்ஸ்-ஆப்பில் உணவு கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், சேர் மாநகராட்சி அலுவலர்களும் சுகாதாரத் துறையினரும் கரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்று கூறி எங்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்துள்ளனர். எங்கள் நன்மைக்கு தான் நீங்கள் கூறுகிறீர்கள் என்று எங்களுக்கு புரிகிறது.
நாங்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு தேவையான உணவு பொருள்களை வழங்க வேண்டும். கடந்த மாதம் வாங்க வேண்டிய ரேஷன் அரிசி கூட இன்னும் வாங்கவில்லை. மளிகை பொருள் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை வெறும் அரிசியை வைத்து கஞ்சி காய்ச்சி குடித்து விடலாம். ஆனால் கஞ்சி காய்ச்சுவதற்குக் கூட அரிசி இல்லை. இதனால் சிறு குழந்தைகளை வைத்து நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். எனவே மாநகராட்சி அலுவலர்கள் தயவுகூர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்'' என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பயம்: கூழ் குடிக்க அஞ்சும் மக்கள்