ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கிட, கன்னியாகுமரியில் வட மாநில இளைஞர்களால் நடத்தப்படும் தொண்டு நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, வடசேரி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த ஏழை எளியவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், வடமாநில இளைஞர்கள், உணவு பொட்டலங்களை கைகளில் கொடுக்காமல், தரையில் வைக்க, அதனை எடுத்துக்கொள்ளக் கூறியிருந்தனர். இதைப் பார்த்த சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர், இளைஞர்களின் செயலை கண்டித்தார். ஆனால், இளைஞர்களோ, அவர்களுக்கு ஏதேனும் நோய் இருக்கும் அச்சத்தில் கைகளில் கொடுக்கவில்லை எனக் கூறினர்.
இது அவர்களை அவமதிக்கும் செயல் என அலுவலர் கண்டித்ததையடுத்து, இருக்கைகளில் பொட்டலங்களை வைத்து இளைஞர்கள் விநியோகித்தனர். ஆனால், இச்செயலும் தவறானவை என கண்டித்த சுகாதாரத் துறை, கைகளில் உணவு பொட்டலங்களைக் கொடுங்கள் அல்லது உணவு வழங்கக்கூடாது என்பது திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதையடுத்து, வேறு வழியின்றி வடமாநில இளைஞர்கள் உணவு பொட்டலங்களை மக்களின் கைகளில் கொடுத்தனர்.