கன்னியாகுமரி: கேரள மக்களின் பாரம்பரிய திருநாளான ஓணம் பண்டிகை நாளை (ஆகஸ்ட் 20ஆம் தேதி) துவங்க உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) 100 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பங்கி பூ 600 ரூபாயாக விலை அதிகரித்து உள்ளது இதேபோல் அனைத்து வகை பூக்களும் 3 மடங்கு விலை உயர்வு கண்டுள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை தென் தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. ஓணம் ஒரு பாரம்பரிய சிறப்பு மிகுந்த திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியை சூழச்சியால் வீழத்திட திருமால் வாமனராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டார்.
அதற்கு மகாபலி சக்கரவர்த்தி அனுமதி அளித்தார். உடனே தன் காலால் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்படும் சமயம் மகாபலி சக்கரவர்த்தி வாமனரிடம், ஆண்டு தோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என வரம் கேட்டு உள்ளார். அவர் கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார்.
இதன் அடிப்படையில் தன் நாட்டு மக்களை காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும். திருவிழாவில் பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஊஞ்சல் ஆடி, பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் வைத்து மிக சிறப்பான முறையில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சாலை விபத்தில் உயிரிழந்த ஒன்றிய செயலாளர்.. விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி!
அந்த வகையில் இந்த ஆண்டு ஒணம் பண்டிகை நாளை முதல் துவங்குகிறது. அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கும் இந்த பண்டிகை திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்த 10 நாட்களும் கேரள மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். வீடுகளில் அத்தப் பூ கோலம் இட்டு, ஒண ஊஞ்சல் கட்டி மகிழ்வது வழக்கம்.
இதனை ஒட்டி அத்தப் பூ கோலம் போட பூக்கள் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து பல டன் கணக்கில் கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். அதை போல் கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பூக்களை வாங்க தோவாளை மலர் சந்தைக்கு வருவதால் மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயரும்.
நாளை ஒணம் பண்டிகை துவங்க உள்ளதால் இன்றைய நிலவரப்படி நேற்று 1 கிலோ 200 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ இன்று 700 ரூபாயும், மல்லிகைப்பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்தப்பூ கோலம் போடுவதற்குரிய சம்பங்கி பூ 100 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
இதேபோன்று கிரேந்தி பூ கிலோ 60 ரூபாயும், மரிக்கொழுந்து 100 ரூபாயும், செவ்வந்தி பூ 300 ரூபாய்க்கு விற்பனையானது. கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால் தோவாளை பூ சந்தை களைகட்ட தொடங்கி உள்ளது. இதனால் பூ விவசாயிகளும் , வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.