குமரி மாவட்டத்தில் தோவாளையில் உள்ள மலர் சந்தையில் இங்கிருந்துதான் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த மலர் சந்தையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, பண்டிகை காலங்கள், திருவிழாக்கள் போன்ற காலக்கட்டங்களில் பூக்களின் விலை உச்சத்தை தொடும்.
குறிப்பாக அதிக அளவு கேரள வியாபாரிகள் இங்கு பூக்கள் வாங்க போட்டியிடுவதால் எப்போதும் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை அதிகமாகவே காணப்படும்.
இந்நிலையில் தோவாளை மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் மலர்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.600 க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.300 க்கும், 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல சாமந்தி, ரோஜா, முல்லை போன்ற மலர்களில் விலை வெகுவாக குறைந்துள்ளது.
பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் உற்பத்தி அதிகம் காரணமாக பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.