கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மிகவும் பிரபலமான மலர் சந்தை செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குமரியில் கோடையை முன்னிட்டு கடுமையான வெயில் நிலவியதால் மலர்ச்செடிகள் வெயிலில் கருகின.
இதனால், தோவாளை மலர் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்தது. பூக்களின் தேவை அதிகம் இருந்த காரணத்தால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்துவருகிறது. இதனால், பூக்களின் உற்பத்தி அதிகரித்து தோவாளை மலர் சந்தையில் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், பூக்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ, தற்போது 200 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 500 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்கும், கனகாம்பரம் 300 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. இதேபோல், ரோஜா, தாமரை போன்ற பூக்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வெளிமாநில வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.