குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை மிகவும் பிரபலமானது. இங்கிருந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தோவாளை மலர் சந்தையில், திருவிழா மற்றும் விசேஷ தினங்களில் பூக்களை ஏலம் எடுப்பதற்காக கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா வியாபாரிகள் குவிவது வழக்கம்.
அதன்படி, இன்று ஆடி மாதம் பிறந்த நிலையில் தோவாளை மலர் சந்தையில் ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர். குமரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள், கொடை விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நிகழ்வுகள் நடைபெறும் என்பதால், அதிக அளவில் பூக்கள் தேவைப்படும். இதனால் பூக்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
தோவாளை மலர் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு (கிலோவில்) ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ, தற்போது ரூ.400க்கும், பிச்சிப்பூ ரூ.350லிருந்து ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.250லிருந்து ரூ.500ஆகவும் உயர்ந்துள்ளது. இதுபோல தாமரை, ரோஜா உள்ளிட்ட மலர்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.