கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் சுற்றுச்சூழல் பூங்கா சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உழவர்தினத்தை முன்னிட்டு இன்று (16-ம்தேதி) முதல் 18ஆம்தேதிவரை 3 நாள்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக வெளிநாடுகள் மற்றும் பெங்களூரு, ஊட்டி போன்ற இடங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டு வரப்படட்டுள்ளன.
ஊட்டி மலர் கண்காட்சி போன்று நடத்தப்படும் இக்கண்காட்சியின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. கண்காட்சியை தமிழ்நாட்டிற்கான டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, எம்எல்ஏக்கள் ஆஸ்டின், சுரேஷ்ராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இந்த கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களும் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவர். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கபடுகிறது.
மேலும் கண்காட்சியில் ராட்சத டைனோசர், அலங்கார மலர்வளைவுகள், செல்ஃபி எடுக்கும் அரங்கு உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது நாளான (17-ம்தேதி ) நாளை விவேகானந்தா கேந்திராவில் மலர் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடக்க இருக்கிறது.