கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. நண்பகலுக்குப் பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத் தொடங்கி இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், கோட்டார் சாலை, வடசேரி ஆராட்டு ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். நாகர்கோவில் நகரில் தாழ்வானப் பகுதியிலுள்ள ஒருசில வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.
குமரி மாவட்டத்தில் முள்ளங்கினாவிளை, கொட்டாரம், மயிலாடி, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, குளச்சல், இரணியல், தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தின் மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: