புரெவி புயலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை, பலத்தக் காற்று வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதனுடன், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
தற்போது, புரெவி புயலின் தன்மை மாறியுள்ளதாலும், கன்னியாகுமரி மாவட்டத்தை பாதிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிய வந்துள்ளதை அடுத்து, கடந்த சில நாள்களாக அச்சத்தோடு காணப்பட்ட பொதுமக்கள், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்கான தடையை அரசு விலக்கிக் கொள்ளாததால் ஏழாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள், கட்டு மரங்கள், ஏராளமான விசைப்படகுகள் கடற்கரையிலேயே முடங்கியுள்ளன.
தேங்காய்ப்பட்டணம், குளச்சல், சின்ன முட்டம், முட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் தினந்தோறும் நடைபெற்றுவரும் சுமார் 10 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் தற்போது முடங்கியுள்ளதால் மீனவர்கள் வருவாய் இன்றி காணப்படுகின்றனர்.
மேலும், மீன் பிடிப்பதற்கான தடை, அரசால் எப்போது விலக்கப்படும், தங்கள் தொழிலை வழக்கம்போல் மேற்கொள்ளும் நாள் எப்போது வரும் என மீனவர்களும், அவர்களது குடும்பமும் எதிர்நோக்கி காத்துள்ளனர்.
இதையும் படிங்க: நடுக்குப்பம் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்!