கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை, நீரோடி, இரவிபுத்தன்துறை, மிடாலம் உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். வழக்கமாக இவர்கள் ஆழ்கடலில் சுமார் நாற்பது நாள்கள் வரை தங்கி மீன்பிடித்து கரை திரும்புவார்கள்.
கடந்த மாதம் கியார், மகா புயல் உருவாகி உள்ளதாகவும் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின.
அதனடிப்படையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் குஜராத், மும்பை, கோவா, கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் கரை சேர்ந்தனர். வள்ளவிளை, இரவிபுத்தன்துறை மீனவர்கள் சுமார் 90 பேர் இன்னும் கரை சேரவில்லை.
இந்நிலையில் புயலுக்காக குஜராத் மாநிலம் வோராவேல் துறைமுகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 45 விசைப்படகுகளில் சுமார் 650 மீனவர்கள் கரை ஒதுங்கியதாகத் தெரிகிறது. 13 நாள்களுக்கும் மேலாக இந்த மீனவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், லட்சத்தீவு அருகில் உள்ள கல்பனி தீவில் நான்கு விசைப்படகுகளில் சுமார் 60 மீனவர்கள் கரை சேர்ந்திருக்கின்றனர். மகா புயலில் கரை சேர்ந்த ஒரு படகை காற்று கரையில் தூக்கி வீசியுள்ளது.
இதனால் படகை மீட்க முடியாமல் மீனவர்கள் தவித்துவருகின்றனர். குஜராத், லட்சத்தீவு பகுதிகளில் கரை சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சொந்த ஊர் செல்ல அலுவலர்கள் அனுமதிக்காததால் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும் உயிருக்காக கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை மத்திய, மாநில அரசுகள் செய்யாததால், தங்களை காப்பாற்றக் கோரி கண்ணீர் மல்க வாட்ஸ்அப் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் தாக்குதல் - வைரல் காணொலி