கன்னியாகுமரி திரிவேணி சங்கம் பகுதியில் கடல் அலையே இல்லாமல் நேற்று முன்தினம் (அக்.1) கடல் உள்வாங்க தொடங்கியது. அதேபோன்று நேற்று (அக்.2) மாலை 6 மணிக்கும் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதுதொடர்பான புகைப்படமும் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கன்னியாகுமரி கடலில் பௌர்ணமி, அமாவாசையையொட்டி வரும் நாள்களில் கடல் உள்வாங்குவது சாதாரண நிகழ்வாகும். மாதம் இருமுறை நடைபெறும் பருவமாற்றத்தை பற்றி தெரியாத சிலர் தவறான தகவலை பொதுமக்களுக்கு பரப்பும் வகையில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என்றனர்.
பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சப்பட தேவையில்லை இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தவறான தகவலை பரப்பும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’ரோப் கார் வந்தா எங்க வாழ்வாதாரம் பறிபோகும்’