தேசிய கடல் மீன் வள மசோதா குறித்து, மீனவர்களிடையே கருத்துக் கேட்கும் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது, கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் மீன் பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்பது போன்ற பல்வேறு சரத்துகள் மீனவர்களைப் பாதிக்கும் வகையில் இந்த மசோதாவில் உள்ளதாக மீனவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சட்டம் பெரும் முதலாளிகளை ஊக்குவிப்பதற்காக மட்டுமே கொண்டுவரப்பட உள்ளதாகவும், இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். அப்போது ஒரே நேரத்தில் பல தரப்பினரும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல முற்பட்டதால், கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: விவசாயிகள் விளைந்த நெல்லை வயலில் இரவு பகல் பாராமல் பாதுகாத்து வரும் அவலம்!